Sunday, February 14, 2016

சற்குரு - தாத்தா - 25

நினைவின் அலைகளில் மிதந்து வந்து இன்று கரையேறிய இலை ஒரு தீபாவளித் திருநாள்.
பொதுவாக பண்டிகை தினங்கள் அனைத்துமே சூரியன் வருவதற்கு முன்னரே நிகழ்ந்துவிட்டிருக்கும். குளித்து திருநீர் மணக்க அமர்ந்து, புத்தாடைகளுக்கு சந்தன குங்குமமிட்டு, தாத்தா ஆசி வழங்கும் அதிகாலைகள்.
அப்படி ஒரு தீபாவளி நன்னாள். பேரன் பேத்தியர் பலரும் கூடியிருக்கிறோம் (தேவி, ஜெயஸ்ரீ, ரம்யா, ராஜேஷ்,பாலா மற்றும் நான்) அனைவரையும் அழைத்துக்கொண்டு வெளியே கிளம்பினார்கள் தாத்தா. 'திருமலை நாயக்கர் மஹாலுக்குப் போகலாமா? கோவிலுக்குப் போகலாமா?' எனத் தாத்தா வினவ, அனைவரும் 'கோவிலுக்கு' எனச் சொல்ல (எவ்வளவு நல்ல பிள்ளைகள்!!☺) , படை கிளம்பியது பரங்குன்றை நோக்கி. ஊரெங்கும் வெடி வெடிக்கும் ஒலி; எனக்கோ மனதில் கிலி. வெடி என்றால் இன்றும் கிலிதான் - அதனாலேயே தீபாவளியை விட பொங்கல் திருநாள்தான் பிடிக்கும். வெடிக்கு பயந்து அழுது தாத்தாவிடம் திட்டு வாங்கும் தீபாவளிகள்...
திருப்பரங்குன்றம் அடைந்ததும், 'கோவிலுக்குள் போகலாமா? மலை மேல் ஏறலாமா?' எனத் தாத்தா கேட்க, 'மலை மேல் என்ன இருக்கு தாத்தா?' என்று நாங்கள் வினவ, 'அட, பார்த்ததில்லையா? வாங்க போகலாம்' எனத் தாத்தா கூறினார்கள். அனைவரும் உற்சாகமாய் மலையேறத் தொடங்கினோம். இளையவர்களான பாலாவும் ரம்யாவும் குச்சிமிட்டாய் கையில் வேலென ஏந்தி ஏறினார்கள்.
பாதி வழி வரை வெகு உற்சாகமாய் இருந்தது பயணம். காலத்தில் அழியாத கற்பாறைச் சுவடுகளில் எங்கள் சிறு பாதம் பதித்து, தலைவனைத் தொடரும் சேனையாய் மலையேறிக் கொண்டிருந்தோம். வெயிலேறத் தொடங்கியது. தாத்தா ஓரிடத்தில் இளைப்பாற அமர்ந்தார்கள். நாங்கள் சற்று முன்னால் ஏறிச் சென்று கொண்டிருந்தோம்.
எங்கள் படை வருவதைப் பார்த்து நெடுநாள் பிரிந்த உற்றாரைக் காண வரும் உற்சாகத்தோடு வரவேற்றது ஒரு வானரப் படை. குட்டி முதல் குலமூதாதை வரை பெருங்குடும்பம். அனைவரும் ஒரே நேரத்தில பயத்தில் 'தாத்தா!! தாத்தா!!!' என்று அலறினோம். என்ன நிகழ்ந்ததோ எனப் பதற்றத்துடன் மேலே மிக விரைவாக ஏறி வந்தார்கள் தாத்தா(அப்போதே தாத்தாவுக்கு ஏறக்குறைய 75 வயது, இன்றைய தலைமுறைக்கு 75வயதில் திருப்பரங்குன்ற மலையேற முடியுமா, மலையை விட்டு விடலாம், திருப்பரங்குன்றம் செல்ல பேருந்து ஏற முடியுமா என்பதே சந்தேகம்தான்-அதிலும் சின்னஞ் சிறார்களை கட்டி மேய்த்துக் கொண்டு!!) 
அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லி தாத்தா எங்களை அருகில் அழைத்தார்கள். அதற்குள் குச்சி மிட்டாயை உண்டு முடிக்காத பாலாவைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்கு அதைப் பறிக்க முயல, குரங்கிடம் தரமுடியாது என பாலா விவகார விவாதம் நடத்த, தாத்தா அதைத் தூக்கி எறியச் சொன்னார்கள். எறிந்துவிட்டு
ஓவென பாலா அழ ஆரம்பிக்க நாங்கள் அனைவரும் மருண்டு தாத்தா பின்னால் ஒதுங்கினோம்.
உருவில் பெரிய வானரத்தலைவர் ஒருவர் தலைமை வகிக்க எதிரில் வந்து சுற்றிவளைத்தது அந்தப் படை. தாத்தா பாறைத் தரையில் அமர்ந்து கொள்ள எதிர்கட்சித் தலைவரும் எதிரில் அமர்ந்தார். 'கிர்ர்' என்றார் எ.க.தலைவர். தாத்தா 'என்ன வேண்டும்?' என்று அவரைப் பார்த்துக் கேட்டார்கள். மேலும் அருகில் வந்து தாத்தாவைச் சுற்றிலும் உற்றுப் பார்த்தார் எ.க.தலைவர்.
தாத்தா தன் சட்டைப்பைக்குள் கையை விட்டு சில்லரைக்காசுகளை எடுத்துக்காட்டி, 'இதுதான் இருக்கிறது, வேண்டுமா?' என்றார்கள். பக்கத்தில் இருந்த மந்தி(ரி)கள் தாத்தா கையை ஆர்வத்துடன் எட்டிப் பார்த்தனர். எ.க.தலைவர் காசைக் கையில் எடுத்து முகர்ந்து பார்த்து திருப்பி வைத்துவிட்டார். அவர்கள் நாட்டில் அந்நியச் செலாவணி செல்லாது போலும். மீண்டும் ஒருமுறை 'கிர்ர்..' என்று கட்டளையிட்டுவிட்டு வெளிநடப்பு செய்தார் தலைவர். 'ஐயா சொல்லிட்டாருன்னு வுடறோம். இல்லன்னா நடக்கறதே வேற..' என்று ஆளாளுக்கு ஒரு பார்வை எங்களைப் பார்த்துவிட்டு நகர்ந்தது குரங்கணி. அத்தனைக்கும் நடுவே மிட்டாய் வழிப்பறிக்கு நீதி கிடைக்காமல் அழுது கொண்டிருந்தார் நம் இளம் நாயகன் பாலா. இன்னொரு மிட்டாய் வாங்கித் தருவதாய் இன்னுமொரு சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி மலையிறக்கினார்கள் தாத்தா. இத்தனை கலவரத்திலும் ரம்யா கையில் பத்திரமாய் இருந்தது உறை பிரிக்காத குச்சி மிட்டாய்.
ஒருவழியாய் வீடு வந்து சேர்ந்தால், நல்ல நாளும் திருநாளுமாய், ஆளும் பேரும் வரும் நாளில், பிள்ளைகள் அனைத்தையும் கூட்டிக் கொண்டு காணாமல் போனதற்கு தாத்தாவிற்கு ஒரு சிறப்பு அர்ச்சனை நடந்தது. அப்படியாய் ஒரு தீபாவளி.



No comments:

Post a Comment