Thursday, February 11, 2016

சற்குரு - தாத்தா - 22

மலைக்காடுகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் ஒளிந்து வாழ்ந்தும், இடங்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டும் உடன் பணிபுரிந்தவர்களோடு தொடர்ந்தது சிலகாலம். கடிதங்களில் மட்டுமே ஸ்பரிசிக்கும் தாயகத் தொடர்பும் அடியோடு நின்று போயிருந்தது. தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்கிய எதிர்காலத்தை எண்ணிய இருண்ட நாட்கள். இரவில் ஒளிமிக்க விளக்குகள் ஏற்றத் தடை. ஊர்கள் இருக்குமிடம் தெரிந்தால் குண்டுகள் விழலாம் என்ற அச்சம்.
மாலையில் வீட்டுக் கதைகளை நண்பர்களோடு அசைபோட்டபடி தொடங்கும் உரையாடல்கள் பெரும்பாலும் மனம் கனக்க முடியும். இரவு புரண்டு புரண்டு ஒருவழியாய் மனம் களைத்து உறங்கத் தொடங்குகையில், ஊளையிடும் போர்விமான எச்சரிக்கை முழக்கம். இருளிலும் நிழலெனத் தொடரும் மரணவாடை. பதறியடித்து மாடியிலிருந்து படிகளில் தாவி இறங்கி காட்டுப் பகுதியில் இருக்கும் குழிகளில் பதுங்கி விமானம் தலைக்கு சில நூறடிகள் மேலே பறக்க, உயிர் அதற்கும் சில அடிகள் கீழே பதறித் தவிக்க, அபாயம் நீங்கிய அறிவிப்பு ஒலிக்கும். அதுவரை புதர் மறைவில் இருந்து வேறு நச்சரவு அபாயம் வராது என்று யார் உத்தரவாதம் அளிக்க முடியும். மெல்ல மீண்டும் படுக்கைகளுக்குத் திரும்பினால், வெளியேறிச் செல்லாமல் அங்கேயே அமர்ந்திருக்கும் சில வயதானவர்கள் - "எமனோடு ஓடிப் பிடித்து விளையாடத் தெம்பு இல்லை, இங்கேயே பார்த்துக் கொள்ளலாம் என இருந்துவிட்டோம்" என்று விரக்தி சிரிப்போடு சொல்வார்கள்.
அது போன்ற ஒரு மாலை வேளை. இருள்கவியத் தொடங்கியிருந்தது. இருளுக்குள் ஒடுங்கத் தொடங்கியிருந்தனர் அனைவரும். வழக்கம் போன்ற விமானத் தாக்குதல் எச்சரிக்கை ஒலி. இது வாடிக்கையாகிவிட்டது போன்ற வழக்கத்துடன் அனைவரும் பதுங்கினர்.
அதேநேரம் அருகில் அரைகிலோமீட்டர் தொலைவில் ஒரு ரயில் சிறு ரயில்நிலையத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தது. மலைப்புற கிராமப்புற மக்களுக்கும் நகரத்துக்கும் இருந்த ஒரே தொப்புள்கொடித்தொடர்பு அந்த ரயில். காய்களும் அரிசியும் அன்றாடத் தேவைகளும் மலேயாவின் பிற பகுதிகளில் இருந்து பெரும்பாலும் இந்த ரயில் வழியாகவே வந்து கொண்டிருந்தது. ஏறுவதற்கு ஆயத்தமாயிருந்தவர்களும், நிலைய ஊழியர்களும் எச்சரிக்கை சங்கொலி கேட்டு செய்வதறியாது திகைக்க, காலனை அருகில் உணர்ந்தது போல் பெருமூச்சு விட்டது ரயில். அடுத்த விநாடி அங்கிருந்த ஏறக்குறைய 200-300 பேர் உயிர் குடித்தது மழையெனப் பொழிந்த குண்டுகள். காது செவிடாகிய உணர்வோடு பதைப்போடு குழியைவிட்டு தாத்தாவும் நண்பர்களும் வெளியேறினர். சிலவிநாடி முன் மக்கள்திரளோடு இயங்கிக் கொண்டிருந்த ரயில் நிலையம் நிணமும் சதையுமாய் பற்றி எரிந்து கருகும் நெடியோடு புகையும் பெரு ஓலமுமாய் சரிந்திருந்தது. பதறித் துடித்து ஓடினர். அங்கு கண்ட காட்சி போரின் கொடிய கோர அழிவு முகத்தை மீண்டும் காட்டியது. பலநாள் உணவுண்ணவும் முடியாமல் மனம் அதிர்ந்து போயினர்.
எத்தனையோ போர் செய்திகளும் ஜப்பானியர் முகாம்களில் நடக்கும் கொடுமைகளும் தினம்தோறும் வாடிக்கை செய்தியாகிவிட்ட போதிலும், தலைக்கு மிக அருகில் தொங்கும் கத்தியென மரணத்தை உணர்த்திய, அரைகிலோமீட்டர் தொலைவில் நடந்த இப்பேரழிவு வெகுவாய் அனைவரையும் பாதித்துவிட்டது. இந்த துரதிர்ஷ்டவசமான ரயிலில்தான், நான் முன்னர் குறிப்பிட்ட, எனது தூத்துக்குடி பள்ளியின் ஆறாம் வகுப்புத் தமிழாசிரியையின் தந்தை அன்று அந்த விநாடி இருந்தார், இல்லாது போனார்.


No comments:

Post a Comment