Tuesday, January 26, 2016

சற்குரு - தாத்தா - 21

டிசம்பர் 1941 - பினாங் நகர வரலாற்றின் எரி தினங்கள். தீயணைப்பு நிலையத்தின் மேல் தாக்குதல் நடத்தி நாசப்படுத்தியதில் பற்றி எரிந்த நகரின் நிலை நரகமாயிற்று.
காவலன் காவான் எனின் எது நிகழுமோ அதுவே நிகழ்ந்தது. அதுவும் கையறு நிலையில் நாட்டைப் பகைவன் தாக்குதலுக்கு விட்டுவிட்டு எந்த அறிவிப்புமின்றி நிராதரவாக்கியிருந்தது மாட்சிமை பொருந்திய நிர்வாகம். 

இதற்கு ஒரு தினம் முன்னதாகவே ஆங்கிலேய அரசின் அத்தனை ஆங்கிலேய அலுவலர்களுக்கும் ரகசிய ஆணை பிறப்பித்து இரவோடு இரவாக கப்பலேற்றினர். அதனிடையே பினாங் நகராட்சியில் பணிபுரிந்த ஒரு சீனருக்கும் அந்த அழைப்பு வந்திருந்தது - 'நள்ளிரவில் துறைமுகத்துக்கு குடும்பத்துடன் வரவும்'; அவ்வளவுதான் தகவல். காரணம் அறியாத அவரும் துறைமுகம் சென்றடைய அவருக்கு அதிர்ச்சி - நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலேய கணவான்களும் அவர்கள் குடும்பத்தினரும் அவசரஅவசரமாய் கப்பலேற, இவரும் ஏதென்று அறியாமல் ஏற முற்பட்ட போது, தடுத்து நிறுத்தப்பட்டார். தானும் ஆங்கிலேய அரசின் உயரதிகாரி என்று தெரிவித்து ஆணையைக் காட்டிய போதும், 'தவறுதலாக உங்களுக்குத் தகவல் அனுப்பப் பட்டுவிட்டது. கப்பலில் வெள்ளையர்களை மட்டுமே ஏற்றிக் கொள்ள அனுமதி' என்று இறக்கி விடப்பட்டார். சூரியன் மறையாத ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் ஒற்றைப் பிரதிநியாய் இருளில் தனித்து விடப்பட்டு, எவ்விதம் எதிரிகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற எந்த ஆணையும் இன்றி நின்ற போது, அதுவரை அசைக்க முடியாதிருந்த ராஜவிசுவாசமும் நம்பிக்கையும் அவருக்கும் ஆட்டம் கண்டது. அவர் மூலம் சிறிது சிறிதாய் தாங்கள் நிராதரவாய் விடப்பட்ட நிலை மக்களுக்குப் புரிந்தது.

அடுத்தடுத்து நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதல்களில் நிலைகுலைந்த மக்கள் மேய்ப்பன் இல்லா மந்தையாய் அலைந்தனர். 

உள்ளூர் மக்கள் மலைப்புற கிராமங்களையும் ரப்பர் தோட்டங்களையும் நோக்கி பயந்து ஓடினர். அதைத் தொடர்ந்து தாத்தாவும் உடன் பணிபுரிந்தவர்களும் காடுகளுக்கும் மலையில் ரப்பர் தோட்டங்களுக்கும் சென்று தங்க முடிவு செய்தனர். தண்ணீர்மலையான் என்னும் பாலதண்டாயுதபாணியை வணங்கி வாணிபத்தையும், வீடுவாசலையும் விட்டுவிட்டு உயிரை மட்டும் கையில் பிடித்து வெளியேறியது நகரத்தார் குடும்பங்கள். 

நேற்றிருந்தார் இன்றில்லை எனும் போது நாளை என்பது யார் வசம் - அனைத்தையும் மேலிருந்து பார்க்கும் அவன் வசமா? விமானத்தில் வரும் எமன் வசமா?





அக்கரை நிலை இவ்வண்ணமெனில் வீட்டில் அதனினும் மேலாய் தாயும், தகப்பனும், உடன்பிறந்தோரும் தகவலறிய வழியின்றி கடிதம் மேல் கடிதம் எழுதிக்கொண்டு, ஏதேனும் வழியில் நல்ல செய்தி வந்துவிடாதா என நம்பிக்கையோடு காத்துக்கொண்டு நாட்கள் நீண்டு வருடங்களாயின.

"ஆசை மனதுக்கு வாசலை வைத்துப் போனவன் போனான்டி
(போனவன் போனான்டி)
வாசலைத் தேடி வாழ்த்துக்கள் பாடி வந்தாலும் வருவான்டி" - படகோட்டி படத்து வாலியின் வரிகள்; நெய்தல் நிலத்து இரங்கலையும் ஏக்கத்தையும் சுமந்த நெஞ்சை மயக்கும் சுசீலாம்மா குரலில், எப்போது கேட்டாலும் மனதை வருடும்.

போனவர் குறித்த எந்தத் தகவலுமின்றி கடலைப் பார்த்துப் பார்த்து ஏங்கும் பேதை நெஞ்சின் வரிகள். தாத்தாவின் நினைவலைகள் போர்க்களத்தில் நிற்கும் தருணமதில், அன்று எப்படி இருந்திருக்கும் அப்பத்தாவின் மனநிலை? மணமாகி சிலமாதங்களில் கிளம்பிச் சென்ற கைப்பிடித்த அத்தை மகன்;அவர் சென்ற திசையில் போர்முரசொலிக்க, கடிதங்களே இல்லை; அனுதினம் யுத்தத்தில் ஏற்பட்ட அழிவுகளும் உயிரிழப்புகளும் செய்திகளாய் வர, தனக்கான செய்தியும் அதில்தான் இருக்கிறதோ என மனம் தவித்த தவிப்பு யார் அறிவார். தகவல் ஏதும் அறிய முடியாத நிலைகளில் மனம் போடும் நாடகங்கள் அனைத்தும் அச்சத்தை ஐயத்தைப் பெருக்குவதாகவே இருக்கும் என்று நாம் உணரமுடியும். நாம் தொடர்பு கொள்ளும் நபர் 10 முறை தொடர்ந்து போனை எடுக்கவில்லை என்றாலே என்னவெல்லாம் கற்பனை செய்கிறது மனது. "யாருமே மிச்சமில்லையாம்.. மலேயாவில் எல்லாம் ஊரே அழிந்துவிட்டதாம்" என்றெல்லாம் பரவும் பரபரப்பு வதந்திகள்.



தங்கமாய் குலம்விளங்கப் பெற்றெடுத்த ஆண்மகவு முகம் பார்க்கவும் வரமுடியாத கணவன்; குழந்தை பிறந்த செய்திக்கும் பதில் ஏதுமில்லை; தவழும் பிள்ளைக்கு முகம் காட்டவேனும் எப்போ வருவாரோ எந்தன் கலி தீர என்று எப்படித் தவித்திருக்கும் அந்த மனது. கணவன் உயிரோடுதான் இருப்பான் என எந்த நம்பிக்கையில் உலவுகிறாள் என ஊர் மெல்லப் பின்னால் பேசத் தொடங்கியிருப்பதும் அரசல் புரசலாயாய் காதில் விழவே செய்கிறது. அனைத்தையும் அடிமனதில் அடக்கிக் கொண்டு, பழநியாண்டவன் பதங்களைப் பற்றிக் கொண்டு, நாட்களைக் கழித்த அப்பத்தா சேதுரத்தினம். இன்று (27-ஜனவரி) அவர்களது 93ஆவது பிறந்ததினம்.

முந்தைய பதிவு (20)

அடுத்த பதிவு (22)

No comments:

Post a Comment